×

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ரயில்வே ஊழியர் பரிதாப பலி: தனியார் மருத்துவமனையை உறவினர்கள் திடீர் முற்றுகை

அண்ணாநகர்: பெரம்பூர் ஜி.கே.எம்.காலனி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(61). ஓய்வுபெற்ற ரயில்வே டிக்கெட் பரிசோதகர். இவருக்கு, கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சொந்த செலவில் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடிவு செய்த அவர் வில்லிவாகத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குணசேகரனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைக் கேள்விப்பட்ட குணசேகரனின் உறவினர்கள் ஏராளாமானோர் திரண்டு வந்து, போதிய சிகிச்சை அளிக்காததால் தான் குணசேகரன் இறந்துவிட்டதாக கூறி, தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும், மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் குணசேகரன் உறவினர்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து,  குணசேகரன் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...