சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 55% பேர் தடுப்பூசி போட ஆர்வம் காட்டவில்லை : சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த முடிவு

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தடுப்பூசி முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு 160 மாநகர சுகாதார மையங்கள் மற்றும் 36 மினி கிளினிக்குகள் என மொத்தம் 196 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு வகையான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் வயது முதிர்ந்தவர்களுக்கு 50 நடமாடும் தடுப்பூசி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் 20 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் கடந்த மார்ச் 20ம் தேதி நடத்தப்பட்டது.

அந்த முகாமில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோய் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதையடுத்து சென்னை மாநகராட்சியில் தினம் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 6ம் தேதி 6,799 பேர், 7ம் தேதி 16,066 பேர் 8ம் தேதி 20,003 பேர் 9ம் தேதி 27,070 பேர், 10 ம் தேதி 29,401 பேர், 11 ம் தேதி 14,745 பேர் என தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் 11ம் தேதி வரை 9,51,379 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை 55% பேர் தடுப்பூசி இதுவரை செலுத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. எனவே தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் சிறப்பு முகாம் நடத்தவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Related Stories:

>