முகக்கவசமின்றி குவிந்த வியாபாரிகள் பொய்கை மாட்டுச்சந்தை மூடியதால் மாற்று இடத்தில் விதிமீறி விற்பனை கொரோனா பரவும் அபாயம்

வேலூர், ஏப்.14: பொய்கை மாட்டுச்சந்தை மூடியதால், முகக்கவசமின்றி குவிந்த வியாபாரிகள் மாற்று இடத்தில் விற்பனையில் ஈடுபட்டதால் ெகாரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் உள்ளிட்டவை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. வேலூரில் உள்ள நேதாஜி மார்க்கெட், மாங்காய் மண்டிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள 3 உழவர் சந்தைகள், அருகில் உள்ள பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டு நேற்று முன்தினம் முதல் இயங்கி வருகிறது. மேலும், வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து வாரச் சந்தைகளையும் மூட கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். இந்நிலையில் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும். இந்த மாட்டுச்சந்தை தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களிலும் பிரபலமானதாகும். அங்கிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள். இதனால் செவ்வாய்க்கிழமை தோறும் இந்த பகுதி முழுவதும் மாடுகள் நிறைந்து காணப்படும்.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வாரச்சந்தைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டதால் நேற்று காலை பொய்கை மாட்டு சந்தையும் மூடப்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் இதையறியாத விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வழக்கம்போல் தங்கள் மாடுகளை ஓட்டி வந்தனர். இதனால் அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். ஆனால் மாட்டு சந்தை நடைபெறும் இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் கலெக்டர் உத்தரவு மற்றும் கொரோனா தடுப்பு விதிமீறி 100க்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த மாடு, கோழி உள்ளிட்டவற்றை விற்பனை செய்தனர். மேலும் அவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசமின்றியும், சமூக இடைவெளி இல்லாமலும் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் கொரோனா தொற்று பரவும் சூழல் உருவாகி உள்ளது. எனவே இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>