குடியாத்தம் அருகே அதிகாலை பரபரப்பு 4 யானைகள் கிராமத்தில் புகுந்து அட்டகாசம்

குடியாத்தம், ஏப்.14: குடியாத்தம் அருகே அதிகாலையில் கிராமத்தில் புகுந்து 4 யானைகள் அட்டகாசம் செய்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் வனச்சரகம் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்நிலையில் ஆந்திர வனச்சரகத்தில் உள்ள யானைகள் சரணாலயத்தில் இருந்து அடிக்கடி யானைகள் வெளியேறி கூட்டம் கூட்டமாக குடியாத்தம் அருகே உள்ள தமிழக வனப்பகுதிக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் தமிழக யானைகளும், ஆந்திர யானைகளும் வனப்பகுதியில் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதேபோல் வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக குடியாத்தம் அருகே உள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதேபோல் ஆந்திர வனப்பகுதியில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு 21 யானைகள் வெளியேறி குடியாத்தம் வனப்பகுதிக்குள் வந்தது. இதை கவனித்த குடியாத்தம் வனத்துறையினர் யானைகளை விரட்டி அடித்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 யானைகள் குடியாத்தம் அடுத்த தீர்த்தமலை, சைனகுண்டா, தனகொண்டபள்ளி ஆகிய கிராமங்களில் நுழைந்தது. தொடர்ந்து வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தியது.

அப்போது பணியில் இருந்த குடியாத்தம் வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை காட்டுக்குள் விரட்டினர். அதிகாலையில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் யானைகள் கிராமங்களில் புகுந்துவிடும் என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறுவதை நிரந்தரமாக தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Related Stories: