ஆடை உற்பத்தி துறை வீழ்ச்சியடையும் மீண்டும் முழு ஊரடங்கு வேண்டாம்

திருப்பூர், ஏப். 14: தொழில் துறையையும், தொழிலாளரையும் பாதிக்கும் என்பதால் மீண்டும் ஊரடங்கு வேண்டாம் என, மத்திய அரசிடம் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) வேண்டுகோள் விடுத்துள்ளது

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன், ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி இராணி, வர்த்தக அமைச்சர் பியூஸ்கோயல் ஆகியோருக்கு, ஏ.இ.பி.சி(ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்) தலைவர் சக்திவேல் அனுப்பியுள்ள கடிதம்: குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், நாட்டின் முதுகெலும்பாக உள்ளன. கிராமப்புற பகுதிகளைச்சேர்ந்த 1.30 கோடி தொழிலாளர்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றுவருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை வீசத்துவங்கியுள்ளது. கொரோனா பரிசோதனை, தடுப்பூசி போடும் பணிகளை அரசு வேகப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. கொரோனா பாதிப்புகளிலிருந்து, ஆடை உற்பத்தி துறை, தற்போதுதான் மீண்டும் எழுச்சிபெறத் துவங்கியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து, இந்திய ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை அதிகரித்துள்ளது. மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், ஆடை உற்பத்தி துறை வீழ்ச்சியை சந்திக்கும். அதிக அளவில் தொழிலாளருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலை, அத்தியாவசிய சேவை துறையாக அறிவிக்கவேண்டும். தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து தடையின்றி இயங்க அனுமதிக்கவேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>