கேரட் அறுவடை துவங்கியது

ஊட்டி, ஏப். 14: நீலகிரி மாவட்டத்தில் தேயிலை பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மலை காய்கறி விவசாயம் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகிய இரு பயிர்களே அதிகளவு பயிரிடப்படுகிறது. இதில், நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட்டிற்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் மவுசு அதிகம் என்பதால் எப்போதுமே ஒரு கணிசமான விலை கிடைப்பதால், ஏராளமான விவசாயிகள் இதனை பயிரிடுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கேரட்டை, விவசாய நிலங்களில் இருந்து எடுத்து, அவைகளை கழுவி சுத்தம் செய்து, பின் மூட்டைகளாக மாற்றி லாரியில் ஏற்றும் வரை பல தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 முதல் 600 வரை கூலி கிடைக்கிறது. மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக கேரட் அறுவடை குறைந்த நிலையில் கேரட் அறுவடையில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது கேரட் சீசன் மீண்டும் துவங்கியுள்ளதால், விவசாயிகள் மட்டுமின்றி, தொழிலாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக கேரட் அறுவடையில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட கேரட் தற்போது வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Related Stories: