×

கொரோனா தடுக்க நடவடிக்கை விடுதிகளில் 50 சதவீதம் பேரை மட்டும் அனுமதிக்க நகராட்சி அறிவுறுத்தல்

ஊட்டி, ஏப். 14:  கொரோனா பரவலை தடுக்க ஊட்டி நகரில் தங்கும் விடுதிகளில் 50 சதவீதம் பேரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என நகராட்சி அறிவுறுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே சுற்றுலா நகரமான ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்த வண்ணம் உள்ளனர்.  இதனை தொடர்ந்து ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவது, தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து வியாபாரிகள், திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்ததது. இக்கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி தலைமை வகித்து பேசுகையில், ஊட்டி சுற்றுலா நகரமாக ஊட்டி உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். கொரோனா பரவலை தடுக்க தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு கிருமிநாசினி வழங்கி, அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்த வேண்டும். அவர்கள் கட்டாயம் முககவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

உடலில் வெப்பநிலை அதிகமாக இருந்தால் மற்றும் காய்ச்சல் இருந்தால் தங்கும் விடுதிக்குள் அனுமதிக்கக்கூடாது. தங்கும் விடுதிககளில் சுற்றுலா பயணிகள் கூடாமல், 50 சதவீதம் பேர் இருக்கும் வகையில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற கட்டுபாட்டை மண்டப உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். திருமணம் மற்றும் சிறு சிறு நிகழ்ச்சிகளுக்கு ஆர்டிஓ.,விடம் அனுமதி பெற வேண்டும். நகராட்சி மார்க்கெட், வணிக வளாகங்களில் உள்ள கடைகளில் வியாபாரிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். அவர்கள் முககவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகள், தனியார் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சரியான விதத்தில் முககவசம் அணியாமல் இருந்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும், என்றார். இதில் வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்