×

மாநகராட்சியில் கொரோனா கட்டுப்பாட்டு அறை மீண்டும் துவக்கம்

கோவை, ஏப். 14: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 600க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பதால் மாவட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில்தான் 75 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோவை மாநகராட்சி சார்பாக கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ. 200 அபராதமாக வசூல் செய்யப்படுகிறது. மேலும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகள், நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்து வசூல் செய்கிறார்கள்.

தொடர்ந்து அலட்சியம் காட்டும் கடைகள் சீல் வைக்கப்படுகின்றன. மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். மாநகராட்சியின் கீழ் உள்ள 32 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தவிர மாநகராட்சி சார்பாக மொபைல் தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்பட்டு 12 வாகனங்கள் மூலம் ஐந்து மண்டலங்களிலும் வீதி வீதியாக சென்று தடுப்பூசி போடப்படுகிறது. கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள ஏதுவாக 24 மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்று குறித்தான அறிகுறிகள், சந்தேகங்கள் குறித்து கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள 0422-2302323 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.  தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால், அவர்கள் வீடுகளுக்கு சென்று வருபவர்கள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம். மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு, மத்தியம், வடக்கு, தெற்கு மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேசி அவர்களது குறைகளை கண்டறிவார்கள்.   

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநகராட்சியின் பிரதான அலுவலகம் உட்பட 5 மண்டலங்களிலும் கொரோனா கட்டுப்பாட்டு அறை கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் கொரோனா தொற்று மிகவும் குறைந்து காணப்பட்ட நிலையில் கட்டுப்பாட்டு அறைகளுக்கு மக்கள் தொடர்பு கொள்வது மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடு குறைந்து காணப்பட்டது.
மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து மீண்டும் முழு வீச்சில் மாநகராட்சியில் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட துவங்கியுள்ளன. மக்களுக்கு மீண்டும் கட்டுப்பாட்டு அறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினமும் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பிரதான கட்டுப்பாட்டு அறைக்கு மட்டும் 30க்கும் மேற்பட்ட மக்கள் தொடர்பு கொண்டு வருகின்றனர். மொபைல் தடுப்பூசி திட்டம் மூலம் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1846 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 32 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4583 பேருக்கு தடுப்பூசி என மொத்தம் 6429 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்