×

கோவை, நீலகிரி மாவட்ட பள்ளிகளில் கொரோனா வழிமுறைகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

கோவை, ஏப் 14: கோவை, நீலகிரி மாவட்ட பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.  தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனாவின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதன் காரணமாக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு மிக தீவிரமாக செய்து வருகிறது. அந்த வகையில் பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவது தொடர்பாக கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி, கோவை, நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டத்திற்கு கண்காணிப்பு அதிகாரியாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநர் லதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இவர்களுடன் கல்வித்துறையை சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மாவட்ட வாரியாக பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். அதன்படி, கோவை நீலகிரி மாவட்டத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் சேதுராமவர்மா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர்கள், பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளனர்.

Tags : Coimbatore ,Nilgiris ,
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு