×

மருதமலை கோயில் மலைப்பாதையில் பெண் ஓட்டி வந்த கார் கவிழ்ந்தது

கோவை, ஏப். 14: கோவை மருதமலை கோயில் மலைப்பாதையில் பெண் ஒருவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மலையில் இருந்து கீழே உருண்டு கவிழ்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக தாய், மகள் உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் தங்கம்மாள் (35). இவரின் கணவர் சபாபதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், தங்கம்மாள் மற்றும் அவரின் மகள் திவ்யதர்ஷினி ஆகியோர் மேட்டுப்பாளையத்தில் தங்கியுள்ளனர். திவ்யதர்ஷினி 10-ம் வகுப்பு படித்து வருகிறர். நேற்று தாய், மகள் இருவரும் காரில் மேட்டுப்பாளையத்தில் இருந்து மருதமலை கோயிலுக்கு சென்றனர். சுவாமி தரிசனம் செய்துவிட்டு மலைப்பாதையில் தங்கம்மாள் காரை ஓட்டி வந்தார். மலைப்பாதையின் 5-வது வளைவில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதி, கீழே உருண்டு கவிழ்ந்தது. இதனை பார்த்த அங்கிருந்த பக்தர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரில் இருந்தவர்களை மீட்டு அடிவாரத்திற்கு கொண்டு சென்றனர். அதிர்ஷ்டவசமாக தங்கம்மாள் மற்றும் அவரின் மகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

கடந்த பத்து மாதங்களில் இதே பகுதியில் 4 விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், விபத்துகளை தடுக்க அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். விசேஷ நாட்கள், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமை உள்ளிட்ட முக்கிய நாட்களில் அதிகளவில் கோயிலுக்கு பக்தர்கள் வருகின்றனர். இதில், பலர் தங்களின் சொந்த வாகனத்தில் மலைப்பாதையில் செல்கின்றனர். கார் போன்றவற்றை முறையான பயிற்சி இல்லாமல் ஓட்டும் நபர்களினால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, மலைப்பாதையில் செல்லும் நபர்களை அடிவாரத்தில் ஆய்வு செய்தே பிறகே அனுமதிக்க வேண்டும். இதனால், விபத்துகளை தவிர்க்க முடியும் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Marudhamalai temple hill ,
× RELATED சிறுத்தை நடமாட்டம் எதிரொலி; மருதமலை...