52 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது

கோவை, ஏப். 14: கோவையில் 52 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்காக, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா பீதியின் காரணமாக பொதுமக்களும் ஆர்வத்துடன் தினமும் கொரோனா தடுப்பூசி போட குவிந்து வருகின்றனர். பலர் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், கோவேக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மருத்துவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள பரிந்துரை செய்து வருகின்றனர்.

 

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கோவைக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 14 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசியும் வந்தன. கோவேக்சின் பயன்பாட்டை கருத்தில் கொண்டே தடுப்பூசி வழங்கி வருகின்றனர். இதனால், குறைந்த அளவில் தடுப்பூசி வந்துள்ளது. மேலும், தொடர்ந்து தடுப்பூசி போடும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது, 52 ஆயிரம் தடுப்பூசிகள் கை இருப்பில் உள்ளது. இதனை பயன்படுத்தி பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கூடுதல் தடுப்பூசிகள் விரைவில் கோவைக்கு வந்து சேரும்” என்றனர்.

Related Stories:

>