×

காந்தி மார்க்கெட்டில் அனைத்து கேட்டுகளுக்கும் பூட்டு

திருச்சி, ஏப். 14: திருச்சி காந்தி மார்க்கெட்டில் செயல்படும் சில்லறை கடை வியாபாரிகள் அனைவரும் கட்டாயம் ஜி கார்னருக்கு சென்று தான் ஆக வேண்டும் என்று மாநகராட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லறை கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு பதிலாக பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் கடைகள் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 11ம் தேதி (நேற்றுமுன்தினம்) முதல் பொன்மலை ஜி கார்னரில் சில்லரை வியாபாரிகள் காய்கறி விற்பனையை தொடங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் வியாபாரிகள் ஜி கார்னருக்கு செல்ல மறுத்து, தொடர்ந்து மார்க்கெட்டிலேயே வியாபாரம் செய்தனர். இதனிடையே ஜி கார்னரில் கடைகள் அமைத்துக்கொள்ள வியாபாரிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. நேற்று முன் தினம் இரவு முதல் சுமார் 1,000 காய்கனி சில்லறை கடைகள் ஜி கார்னரில் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் நேற்றும் வியாபாரிகள் யாரும் அங்கு செல்லவில்லை. ஓரிரு கடைகள் மட்டும் திறந்தனர். யாரும் வராததால் அவர்களும் ஜி.கார்னரில் இருந்து மீண்டும் காந்தி மார்க்கெட்டிற்கு வந்து விட்டனர். இந்நிலையில் நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக காந்தி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கேட்டுகளையும் மூடினர். பூக்கடைகள் வியாபாரத்திற்கு மட்டும் ஒரு கேட்டை திறந்து விட்டனர். பின்னர் அனைத்து சில்லரை கடைகளையும் மூட உத்தரவிட்டனர்.

இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மேலும் மாஸ்க் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதது ஆகியவற்றுக்காக சில கடைக்காரர்களுக்கு அதிரடியாக அபராதம் விதித்தனர். சில்லறை வியாபாரிகள் ஜி.கார்னருக்கு கட்டாயம் சென்றுதான் ஆக வேண்டும் என்றும் அப்போது வியாபாரிகளிடம் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இது குறித்து அரியமங்கலம் உதவி ஆணையர் கமலகண்ணன் கூறுகையில், சில்லறை வியபாரிகள் ஜி.கார்னருக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை. ஆரம்பத்தில் இது போல் ஒரு சில பிரச்னைகள் வருவது இயல்பு தான். இன்று இரவு சில்லரை வியாபாரிகள் ஜி.கார்னருக்கு செல்வார்கள். இந்த பிரச்னை படிப்படியாக ஓரிரு நாளில் சரியாகும். இதுவரை 900 டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags : Gandhi Market ,
× RELATED காவல்துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்