×

ஒரு வருடமாக நிறுத்தம் மீண்டும் சிக்கலுக்கு மாலை நேர பஸ்கள் 20 கிராம மக்கள் வலியுறுத்தல்

சாயல்குடி, ஏப்.14:  முதுகுளத்தூரில் இருந்து இளஞ்செம்பூர் வழியாக சிக்கல் பகுதிக்கு மாலை நேரத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ்கள் ஒரு வருடமாக  நிறுத்தப்பட்டதால், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்படுவதாக புகார் கூறுகின்றனர்.
முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர், பூக்குளம், கோகொண்டான், மேலச்சிறுபோது, கீழச்சிறுபோது, பனையடினேந்தல், பன்னந்தை, கீரந்தை, பூலாங்கால், புத்தேந்தல், சிக்கல் வரை 20க்கும் மேற்பட்ட தொடர்ச்சியாக கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களிலும் விவசாயம், விவசாயம் சார்ந்த கூலி,நூறு நாள் கூலி வேலைகளை செய்து வருகின்றனர். இப்பகுதியினர் அரசு அலுவலகங்கள், மருத்துவமனை, காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட அனைத்து கடைகள் அத்தியாவசிய தேவைகளுக்கு முதுகுளத்தூருக்கு அன்றாடம் சென்று வந்து செல்கின்றனர். இப்பகுதி மாணவர்கள் மேல்நிலை கல்வி, கல்லூரிகளுக்கு  வந்து செல்கின்றனர்.

இந்த வழித்தடத்தில் முதுகுளத்தூரிலிருந்து காலை, மதியம் நேரங்களில் அரசு பஸ், தனியார் பஸ் இயக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மாலை 5 மணிக்கு ஒரு டவுன்பஸ், மாலை 6.30 மணிக்கு ஒரு அரசு பஸ் என மாலை நேரத்தில் இரண்டு பஸ்கள் இயக்கப்பட்டது. இந்நிலையில் கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக மாலை நேரம் வரக்கூடிய இரண்டு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு 12 மாதங்களாக மாலை நேர பஸ்கள் இயக்கப்படாததால் ஷேர் ஆட்டோ, லோடு வேன்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து, தினந்தோறும் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருவதாக மாணவர்கள், பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

மேலும் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக ஷேர் ஆட்டோ, லோடு வண்டிகளில் கூட்டமாக அமர்ந்து செல்ல முடியவில்லை. இதனால் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமத்தை சந்திக்கும் அவலம் உள்ளது. தற்போது தேர்வு காலம் என்பதால் மாலை நேரத்தில் ஷேர் ஆட்டோ கூட கிடைக்காமல் இருசக்கர வாகனத்தில் சென்று வருவதாக மாணவர்கள் கூறுகின்றனர். எனவே முதுகுளத்தூரிலிருந்து இப்பகுதிக்கு வழக்கம் போல் மாலைநேர பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது