×

மார்க்கெட்டில் மிளகாய்க்கு விலை இருந்தும் விளைச்சல் இல்லை நிவாரணம் கேட்கும் விவசாயிகள்

சாயல்குடி, ஏப்.14:  மார்க்கெட்டில் மிளகாய்க்கு போதிய விலை இருந்தும் முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி பகுதியில் குறைவாக விளைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். முதுகுளத்தூர் வட்டாரத்தில் காக்கூர், புளியங்குடி, மகிண்டி, கீழத்தூவல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்கள். சாயல்குடி அருகே கொண்டுநல்லான்பட்டி, டி.எம்.கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள். கமுதி பகுதியில் கள்ளிக்குளம், நெறிஞ்சிப்பட்டி, கோவிலாங்குளம், புதுக்கோட்டை, செங்கப்படை, தோப்படைப்பட்டி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிராக சுமார் 50ஆயிரம் ஏக்கரில் நாட்டு மிளகாய் பயிரிடப்பட்டது. 6 மாத பயிரான நாட்டு மிளகாய், கடந்த டிசம்பர் மாதத்தில் செடியாக நடப்பட்டது. ஜனவரி கடைசி வரை நீடித்த தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மூன்று பகுதிகளிலும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் மிளகாய் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது.

இந்நிலையில் மற்ற இடங்களில் ஓரளவிற்கு மிளகாய் வளர்ந்து வந்தது. இதனை கண்மாய் தண்ணீர், போர்வெல் தண்ணீரை பாய்ச்சி ஆர்வத்துடன் பராமரித்து வந்தனர். ஆனால் காய்க்கும் தருவாயில் செடிகளை மாவு பூச்சி, புழுக்கள் தாக்கியது. இதனால் செடிகள் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே விளைந்த மிளகாயை விவசாயிகள் பறித்து வருகின்றனர். வெளிமார்க்கெட்டில் விலை இருந்தும், போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து நெறிஞ்சிப்பட்டி விவசாயிகள் கூறும்போது, இந்தாண்டு தொடர் மழையால் மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டது. இருந்த போதிலும் இரண்டாம் கட்டமாக செடிகளை நட்டு பராமரித்து வந்தோம். ஆனால் பருவம் தவறிய மழை, பூச்சி தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் போதிய விளைச்சல் இல்லை. தற்போது மகசூல் நிலையை எட்டிய நாட்டு மிளகாய் பறிக்கப்பட்டு வருகிறது. வியாபாரிகள் ரகம், தரத்திற்கு ஏற்ப கிலோ ஒன்றிற்கு ரூ.90 முதல் 130 வரை வாங்குகின்றனர். விலை ஓரளவிற்கு கட்டுபடியானாலும் கூட, குறைவான விளைச்சலால் செலவழித்த பணத்தை கூட எடுக்க முடியவில்லை. எனவே அரசு நிவாரணம் வழங்க வேண்டும்  என்றனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...