-சித்தர்கோயிலில் திருவிழா ரத்து

இளம்பிள்ளை, ஏப்.14: சேலம் மாவட்டம், கஞ்சமலை அடிவாரத்தில் பிரசித்திபெற்ற சித்தர்கோயில் அமைந்துள்ளது.  இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோயிலில், தினமும் பூஜையும், அமாவாசை நாளில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் சித்திரை சிறப்பு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் விவசாயிகள், தங்களது நிலத்தில் விளைந்த அவரை, ராகி, தேங்காய் மற்றும் வெல்லம்  ஆகியவற்றை கொண்டுவந்து, கொட்டை களி கிண்டி சுவாமிக்கு படையல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். தற்போது கொரோனா பரவல் காரணமாக, அரசின் வழிகாட்டி நெறிமுறைப்படி, இந்த ஆண்டு சித்திரை சிறப்பு திருவிழா ரத்து செய்யயப்பட்டுள்ளது. மேலும் சித்ரா பௌர்ணமி அன்று கஞ்சமலை அடிவாரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் உயரம் கொண்ட மேல் சித்தர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் இரவு நேரத்தில் நடந்து சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம். வரும் சித்ரா பவுர்ணமி அன்று பக்தர்கள் மேல் சித்தர் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: