பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

கெங்கவல்லி, ஏப்.14: சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை நடுவீதியை சேர்ந்த நல்லமுத்து மகன் ராஜா(26). இவர் ஆத்தூர் கேஸ் கம்பெனியில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். இவரும், ஆணைக்கல்மேடு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகள் சௌமியா(23) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கு சௌமியாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த 6ம் தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர், 8ம் தேதி திட்டக்குடியில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு நேற்று சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிக்கரிடம் தஞ்சமடைந்தனர். அவரது பரிந்துரையின்பேரில் ஆத்தூர் டவுன் எஸ்ஐ மூர்த்தி, இருதரப்பு பெற்றோரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சௌமியாவின் பெற்றோர் ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு, ராஜாவுடன் சௌமியாவை அனுப்பி வைத்தனர். இவர் தலைவாசலில் தனியார் கல்லூரியில் எம்ஏ ஆங்கிலம் படித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆத்தூர்: ஆத்தூர் கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் கார்த்திக்(23). எம்பிஏ பட்டதாரி. பெத்தநாயக்கன் பாளையம் மணக்காடு பகுதியை சேர்ந்த அருள் மகள் அகல்யா(22), பிபிஏ படித்துள்ளார். சேலத்தில் உள்ள  கல்லூரியில் படிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி, கல்லாநத்தம் முருகன் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் சிவக்குமார், இருவரின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பெண்ணின் பெற்றோர் ஏற்க மறுத்ததால், அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்ட போலீசார், அகல்யாவை கணவர் கார்த்தியுடன் அனுப்பி வைத்தனர்.

Related Stories: