கிருஷ்ணகிரியில் யுகாதி திருவிழா கோலாகலம்

கிருஷ்ணகிரி, ஏப்.14: தெலுங்கு வருட பிறப்பான யுகாதி திருவிழா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நகர்ப்புறங்களில் மட்டுமன்றி கிராம புறங்களிலும் நேற்று காலை முதல் இளைஞர்கள் கலர் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசியபடி தெருக்களில் வலம் வந்தனர். விழாவையொட்டி அதிகாலையிலேயே வீடுகள் முன்பு வண்ண வண்ண பொடிகளால் கோலமிட்டு காலை சுவாமியை தரிசித்து புத்தாடை அணிந்து யுகாதி பண்டிகையை கொண்டாடினர். அதே போல் கசப்புகளை மறந்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் வேப்பம் இலை, வெல்லம் போன்றவை வழங்கினர்.

யுகாதியையொட்டி கிருஷ்ணகிரி பெரியமாரிம்மன் கோயில், பழையபேட்டை ஈஸ்வரன் கோவில், தேவசமுத்திரம் ஆஞ்சநேயர் கோவில், ராசுவீதி சிவன் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம் பகுதியில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை நேற்று கோலகலமாக கொண்டாடப்பட்டது. பேட்டராயசுவாமி கோயில், கவி லட்சுமி நரசிம்மர்கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று 14ம் தேதி கரிநாள் என்பதால் ஆடு, கோழி வெட்டி உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்து அளித்து கொண்டாடுகின்றனர்.

Related Stories: