தர்மபுரி நகரில் தடுப்பூசி முகாமில் கூட்டம் அதிகரிப்பு

தர்மபுரி, ஏப்.14: தர்மபுரி நகரில் கொரோனா தடுப்பூசி முகாமில் ஊசி போட்டுக்கொள்ள பொது மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், ஊழியர்கள் ஊசிபோட முடியாமல் திணறினர். தர்மபுரி சந்தைப்பேட்டை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமில் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக, தடுப்பூசி போடும் பயனாளிகளை இருக்கையில் அமர வைத்து தடுப்பூசி குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. அதன் பின்பு ஆதார் எண் பதிவு செய்து, ஒவ்வொரு நபராக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இவ்வாறு தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதேபோல், 100க்கும் மேற்பட்ட நபர்கள் நேற்று தடுப்பூசி போட்டனர். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த தடுப்பூசி முகாமில், ஏரியூர் திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தர்மபுரி மாவட்ட வணிகர் சங்கத்தினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தற்போது கொரோனா தொற்று வேகம் எடுத்துள்ளதையடுத்து, பொதுமக்களும் தடுப்பூசிபோட ஆர்வத்துடன் வருகின்றனர். இதனால், ஊழியர்கள் தடுப்பூசி போட முடியாமல் திணறி வருகின்றனர்.

Related Stories:

>