குளித்தலை அரசு மருத்துவமனையில் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி

குளித்தலை, ஏப்.14: குளித்தலை அரசு மருத்துவமனையில் முககவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் கரூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அடுத்து இரண்டாம் நிலையில் உள்ளது குளித்தலை அரசு மருத்துவமனை. இங்கு பொது மருத்துவ பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவு, சித்த மருத்துவ பிரிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பிரிவுகள் உள்ளன. இதனால் சுற்றுவட்டாரத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

சமீப காலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் தொற்று உறுதியாகி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், பொது இடங்களில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே முக கவசத்துடன் கலந்து கொள்ள வேண்டும், அதிக கூட்டங்கள் கூட கூடாது வழிபாட்டுத் தலங்களில் அதிக கூட்டம் கூடக்கூடாது என பல்வேறு வகையில் அறிவிப்புகள் வெளியிட்டது. அதனடிப்படையில் நகர்புற கிராமபுறங்களில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வந்தது.

அதன் ஒரு பகுதியாக குளித்தலை அரசு மருத்துவமனை நுழைவாயிலில் பாதுகாப்பு உடை அணிந்த பணியாளர் ஒருவர் நின்றுகொண்டு மருத்துவமனைக்கு உள்ளே வருவோர் அனைவரும் கட்டாயம் கிருமி நாசினி தெளித்து முக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என தெரிவித்து மருத்துவமனையில் அனுமதித்து வருகிறார். இதனால் மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நடைமுறை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்பதே அனைவரையும் எதிர்பார்ப்பாகும்.

Related Stories: