×

மினி கன்டெய்னரில் கடத்திய ஒரு டன் குட்கா பறிமுதல்: 2 பேர் சிக்கினர்

பூந்தமல்லி: பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கன்டெய்னர் லாரிகளில் மூட்டை மூட்டையாக கடத்தப்படுவதாக பூந்தமல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து நேற்று முன்தினம் பூந்தமல்லி அருகே அவ்வழியாக வந்த மினி கன்டெய்னர் லாரியை மடக்கி விசாரித்தனர். அப்போது, அதில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், வாகனத்தை திறந்து சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கன்டெய்னர் லாரியுடன், 2 பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர். அதில், கௌதம் ராஜ் (32). லாரி டிரைவர் ராமநாதன் (30). அவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து கன்டெய்னர் லாரிகளில் மொத்தமாக குட்கா பொருட்களை கடத்தி வந்து, பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் மினி கன்டெய்னரில் இருந்து லோடு மாற்றுவதுபோல் குட்கா பொருட்களை மாற்றி கொடுத்துவிட்டுச் செல்வது தெரிந்தது.

அவர்களிடம் இருந்து ஒரு டன் குட்கா மற்றும் மினி கன்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, 2 பேரை கைது செய்த போலீசார், குட்கா பொருட்களை யார் யாருக்கு சப்ளை செய்கின்றனர். இவை எந்தெந்த பகுதிகளில் பதுக்கி வைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் யார் உள்ளனர் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : Gutka ,
× RELATED குட்கா விற்ற வாலிபர் கைது