×

கொரோனா தொற்று பரிசோதனை மையங்களை இரட்டிப்பாக்க வேண்டும்

திருப்பூர், ஏப். 13:  திருப்பூரில் கொரோனா தொற்று பரிசோதனை மையங்களை இரட்டிப்பாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் கோபாலிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் பல முயற்சிகளை மேற்கொண்டாலும், சுகாதாரத்துறை, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை. எனவே பரிசோதனை முடிவை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும். தற்போது தாலுகா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 முதல் 3 நாட்களுக்கு பின் தான் முடிவுகள் சொல்லப்படுகிறது. இதனால் டெஸ்டிங் கொடுத்துவிட்டு பொதுமக்கள் எந்த விழிப்புணர்வும் இல்லாமல் வெளியே செல்லும் அவலம் உள்ளது.

கொரோனா தடுப்பு ஊசி தற்போது அனைத்து அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில், குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் போடப்படுகிறது. ஆனால் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வரும்போது தடுப்பு மருந்து நாளைக்கு வழங்கப்படும் என திருப்பி அனுப்பப்படும் நிலை உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும். தேவையான கையிருப்பை உறுதி செய்ய வேண்டும். திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிகபடியான தொழிலாளர்கள் வந்து செல்லும் நகரமாக உள்ளதால் கொரோனா தொற்று பரிசோதனை மையங்களை இரட்டிப்பாக்க வேண்டும். குடிநீர், கழிப்பறை மற்றும் கொரோனா வார்டுகளை முறையாக பராமரிக்க வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தரமான உணவுகளை வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு