நின்று கொண்டு பயணிக்க அனுமதி மறுப்பு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

ஊட்டி,ஏப்.13: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பரவலை கட்டுப்படுத்த அரசு பஸ்களில் குறைந்தளவே பயணிகளை ஏற்றிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் போதுமான பஸ் வசதிகள் இன்றி பல மணி நேரம் காத்து கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதனை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் அரசு பஸ்களில் கூட்டம் கூட்டமாக பயணிகள் செல்லமால் இருக்க, இருக்கையில் மட்டும் பயணிகள் அமர்ந்து செல்லும் அளவிற்கு மட்டுமே பயணிகளை பஸ்களில் ஏற்றிக் கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் நின்றுக் கொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பெரும்பாலான கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்களில் குறைந்த தொலைவிற்கு செல்லும் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பஸ்களில் ஏறி அமர்ந்துக் கொள்கின்றனர். இதனால், தொலை தூரம் செல்லும் பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவர்களை நின்றுக் கொண்டு பயணிக்க கண்டக்டர்கள் அனுமதிக்காத நிலையில், வேறு பஸ்கள் வரும் வரை வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இது ஒரு புறம் இருக்க தற்போது கிராமப்புறங்களில் இருந்து ஊட்டி நோக்கு வரும் பஸ்களில், பஸ் புறப்படும் கிராமங்களிலேயே பயணிகள் ஏறி அமர்ந்துக் கொள்வதால், பஸ்கள் எந்த ஒரு நிறுத்தத்திலும் நிற்காமல் ஊட்டி வரை வந்து விடுகின்றனர். இதனால், பல கிராம மக்கள் பஸ்கள் கிடைக்காமல், ஒவ்வொரு நிறுத்தத்திலும், 10 முதல் 20 பேர் வரை பல மணி நேரம் பஸ்சிற்காக காத்து நிற்க வேண்டியுள்ளது. எனவே, இதனை சமாளிக்க அரசு போக்குவரத்து கழகம் கட்டாயம் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. இல்லையேல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவது மட்டுமின்றி, வேறு விதமான பிரச்னைகளும் உருவாக வாய்ப்புள்ளது.

Related Stories: