பூண்டு விலை குறைவு: விவசாயிகள் கவலை

ஊட்டி,ஏப்.13: நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பூண்டிற்கும் விலை சரிவு ஏற்பட்டு வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு கேரட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீட்ரூட், பீன்ஸ், வெள்ளை பூண்டு ஆகியவைகள் அதிகளவு பயிரிடப்படுகிறது. இங்கு பயிரிடப்படும் மலை காய்கறிகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. குறிப்பாக, இங்கு உற்பத்தி செய்யப்படும் வெள்ளை பூண்டு வெளி மாநிலங்களுக்கு விதைகளுக்காகவும், மருந்திற்காகவும் அதிகளவு கொண்டுச் செல்லப்படுகிறது. இதனால், எப்போதும் பூண்டு விலை சற்று உயர்ந்து காணப்படும்.

ஆனால், கடந்த சில நாட்களாக பூண்டு விலை குறைந்துள்ளது. ஊட்டியில் உள்ள உழவர் சந்தை மற்றுர் மார்க்கட்டுக்களில் கிலோ ஒன்று ரூ.160 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. மேட்டுப்பாளையம் மொத்த மண்டிகளிலும் விலை குறைந்தே விற்பனை செய்யப்படுகிறது. இங்கும் கடந்த வாரம் கிலோ ஒன்று ரூ.90 முதல் 120 வரை மட்டுமே ஏலம் போயுள்ளது. கேரட்டிற்கு விலை சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், கேரட் பயிரிட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதற்கிடையில், பூண்டு விலையும் குறைந்துள்ளதால், பூண்டு விவசாயிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஊட்டியில் கோடை மழை கொட்டியது

ஊட்டி,ஏப்.13: சமவெளிப் பகுதிகளில் வெயில் வாட்டி வரும் நிலையில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பெரும்பாலான மக்கள் கோடை வெயிலை சமாளிக்கவும், அதே சமயம் விடுமுறையை குளிர்ச்சியாக கொண்டாடவும் ஊட்டியை முற்றுகையிட்ட வண்ணம் உள்ளனர்.

கடந்த வாரம் ஊட்டியில் வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மேக மூட்டம் காணப்பட்டது. நேற்று பிற்பகலுக்கு மேல் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கன மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் இந்த மழை நீடித்தது. இதனால், சூடு தணிந்து தற்போது குளிர்ச்சியான கால நிலை நிலவுகிறது. இந்த மழையால் பெரும்பாலான குளம் மற்றும் குட்டைகளில் தண்ணீர் தேங்க துவங்கியுள்ளது.

கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் மழை பெய்யாததாலும், பனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்த நோய் தாக்கி பல ஏக்கர் பரப்பளவிலான தேயிலை செடிகள் நாசமாகின. அதேே பால், மலை காய்கறி விவசாயமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கன மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் பெய்த கன மழையால், ஊட்டி நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. படகு இல்லம் செல்லும் சாலை, கூட்செட் சாலை, சேரிங்கிராஸ் போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்துச் செல்பவர்கள் அவதிக்குள்ளாகினர்.

கன மழை காரணமாக சிறிது நேரம் ஊட்டி ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. சுற்றுலா தலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அனைவரும் வாகனங்களை நோக்கி ஓடினர். மழையால் ஊட்டியில் ஜில்லான காலநிலை நிலவுகிறது. சுற்றுலா பயணிகள் இதனை அனுபவித்து வருகின்றனர்.

மஞ்சூர்: நேற்று முன்தினம் இரவு மஞ்சூர் அருகே உள்ள கெத்தை, கிண்ணக்கொரை சுற்றுபுற பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் இப்பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. நீண்ட நாட்களுக்குபின் பரவலாக மழை பெய்ததால் இப்பகுதி விவசாயிகள் மத்தியில் ஓரளவு ஆறுதலை ஏற்படுத்தியது. கெத்தையில் 10 மி.மீ, கிண்ணக்கொரையில் 21 மி.மீ மழை பதிவானது.

Related Stories: