மாவட்டத்தில் மேலும் 604 பேருக்கு கொரோனா

கோவை, ஏப். 13: கோவை மாவட்டத்தில் புதியதாக 604 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில் தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக 600 பேருக்கு மேல் தொற்று கண்டறியப்பட்டது.

குறிப்பாக, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை காரணமாக அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும், வரும் வாரத்தில் கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு ெதாற்று ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்து 808ஆக உயர்ந்தது. மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றினால் 283 பேர் குணமடைந்துள்ளனர். இதனால்,  மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 730-ஆக உள்ளது. கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் 4,378 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

நேற்று கொரோனா காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 50 வயது பெண் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700-ஆக உயர்ந்தது. இதன் காரணமாக தமிழக அளவில் கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்து கோவை மாவட்டம் 4-வது இடத்தில் இருக்கிறது.

Related Stories: