கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி

கோவை, ஏப். 13: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் உயிர் காக்க அளிக்கப்படும் ரெம்டெசிவியர் மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிறப்பு மையம் மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சுமார் 800 படுக்கை வசதிகள் உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரெம்டெசிவியர் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து கொரோனா தொற்றினால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு அளிக்கப்படுகிறது.

தற்போது மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் இரண்டு தளங்களில் மொத்தம் 300 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு அளிக்க போதிய மருந்து இல்லை. 21 பேருக்கு ரெம்டெசிவியர் மருந்து தேவை என்ற நிலையில், 10 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தினமும், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உயிர் காக்கும் மருந்து தட்டுப்பாடு மருத்துவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை, கோவை அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையங்களிலும் நிலவி வருகிறது.

இந்த மருந்து தட்டுப்பாடு காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் கூறுகையில், “ரெம்டெசிவியர் மருந்து பற்றாக்குறை சற்று உள்ளது. இந்த மருந்து அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் போட வேண்டிய தேவையில்லை. நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மட்டும் அளித்தால் போதுமானது. எனவே, தற்போது உள்ள மருந்தே போதுமானதாக உள்ளது. கூடுதல் மருந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

Related Stories:

>