கோவை ஓட்டல் தடியடி சம்பவம் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் கண்டனம்

கோவை, ஏப். 13: கோவை காந்திபுரம் ஓட்டலில் உணவு சாப்பிட்ட நபர்களின் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்திற்கு பல்வேறு அமைப்பினர், கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பரவல் காரணமாக உணவகம், டீ கடைகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி, இரவு 11 மணி வரை கடைகள் திறக்க கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடு கடந்த 10-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில், 11-ம் தேதி இரவு 10.20 மணிக்கு காந்திபுரம் பேருந்து நிலையம் ஓட்டலில் சிலர் உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது, அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் முத்து, கொரோனாவை காரணம் காட்டி அங்கு சாப்பிட்டு கொண்டு இருந்தவர்கள், கடை ஊழியர்களை லத்தியால் தாக்கினார். இதில், பெண்கள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர். காவல் துறையின் தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். சம்பவம் தொடர்பாக அரசு உரிய விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன் “பெண்கள், குழந்தைகள் மேல் நடத்தப்பட்ட தடியடி கண்டிக்க கூடியது. தற்போது, உதவி ஆய்வாளர் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது கண்துடைப்பு போல் உள்ளது. சட்ட விரோதமாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் “இரவு 11 மணியை தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை.

கோவை காந்திபுரத்தில் பத்தரை மணிக்கு முன்னதாகவே போலீஸ் ஓர் உணவகத்திற்குள் புகுந்து அங்கிருந்தோரை தாக்குகிறது சாத்தான்குள படுகொலைகளை நிறைப்படுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை” என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

கோவை மாவட்ட ஓட்டல் அசோசியஷன் “கொரோனாவால் ஓட்டல் தொழில் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் போலீசாரின் தாக்குதல் என்பது கண்டிக்கக்கூடியது. சம்மந்தப்பட்ட போலீசார் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர். மேலும், வாலிபர் சங்கத்தினரும் காவல்துறையினர் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>