மாவட்டத்தில் 2,035 பேர் வீடுகளில் தனிமை

ஈரோடு, ஏப். 13: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 146பேருடன் தொடர்பில் இருந்த 2,035பேர் 514 வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஈரோடு எஸ்பி தங்கதுரை, டி.ஆர்.ஓ., முருகேசன், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பாலாஜி (பொது), ஈஸ்வரன் (கணக்குகள்), ஈரோடு ஆர்.டி.ஓ., சைபுதீன், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) கோமதி, துணை இயக்குநர்(சுகாதார பணிகள்) சவுண்டம்மாள், மாநகர நல அலுவலர் முரளிசங்கர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து கலெக்டர் கதிரவன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா பாதித்த நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 550 படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் கொரோனா சிகிச்சை மையங்களில் முன்னெச்சரிக்கையாக 2,000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர்களின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்து, மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளவும் அல்லது அவர்களின் இல்லத்தில் தனிமைப்படுத்துவதற்கும் பிரித்தனுப்புவதற்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபம், கோபி கலை அறிவியல் கல்லூரி ஆகிய 4 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் (ஸ்கிரினிங் சென்டர்) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல், பவானி, மொடக்குறிச்சி ஆகிய 2 இடங்களில் மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 146பேரில் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் 81பேரும், பவானியில் 16பேரும், பவானிசாகரில் 13பேரும், பெருந்துறையில் 11பேரும், தாளவாடியில் 3பேரும், சென்னிமலையில் 6பேரும், சத்தியில் 5பேரும், கொடுமுடியில் 3பேரும், கோபியில் 8பேர் ஆவர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்ததாக 2,035 பேர் 514 வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, கொரோனா தடுப்பூசியானது போதிய அளவில் இருப்பில் உள்ளதால், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், அரசு மருத்துவ நிலையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் பொது இடங்களுக்கு வரும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே கடைகள் இயங்க வேண்டும். தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி, சோப்பு கொண்டு கைகளை சுத்தம் செய்வதையும், சமூக இடைவெளியை கடைபிடித்து பணியாற்றுவதையும் உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

எனவே, கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டால்தான் வெற்றிபெற இயலும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் அரசின் நோய்தடுப்பு முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கதிரவன் தெரிவித்தார்.

Related Stories: