×

கொரோனா தடுப்பு நடவடிக்கை உழவர் சந்தை 3 இடங்களில் செயல்பட தொடங்கியது

ஈரோடு, ஏப். 13: ஈரோட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று முதல் உழவர் சந்தை 3 இடங்களில் செயல்பட தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் புதிய உச்சமாக இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் நேற்று முன்தினம் 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதார துறையினர் ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன்படி ஒரே இடத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு சம்பத் நகரில் உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு வியாபாரிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இடைத்தரகர்கள் ஆதிக்கம் இல்லாததால், விலை குறைவாக உள்ளதால் உழவர் சந்தையில் எப்போதும் மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது, கொரோனா பரவலையொட்டி ஒரே இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் உழவர் சந்தை மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெரியார் நகர் உழவர் சந்தை, சம்பத் நகர் உழவர் சந்தை ஆகியவை வழக்கம் போல செயல்படும். கூடுதலாக குமலன்குட்டை தொடக்கப்பள்ளி வளாகத்தில் கூடுதலாக ஒரு சந்தை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் குமலன்குட்டை தொடக்கப் பள்ளி வளாகத்திலும் உழவர் சந்தை செயல்படத் தொடங்கியது. குமலன்குட்டை தொடக்கப்பள்ளியில் 40 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதில் நேற்று 24 கடைகள் மட்டுமே போடப்பட்டு இருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நுழைவாயிலில் காய்கறி வாங்க வந்த பொதுமக்களின் இருசக்கர வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல், பொது மக்கள் சானிடைசர் மூலம் சுத்தப்படுத்திய பிறகு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Corona ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...