கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத 6 கடைகளுக்கு சீல்

ஈரோடு,  ஏப். 13:  ஈரோட்டில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத 6  கடைகளுக்கு சீல் வைத்தும், முகக்கவசம் அணியாத பயணிகளை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோ  பறிமுதல் செய்திட கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டத்தில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பல்வேறு கட்ட  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு  பெருந்துறை ரோட்டில் ஈரோடு கலெக்டர் கதிரவன் நேற்று திடீர் ஆய்வு  மேற்கொண்டார்.

அப்போது, அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி சோதனை  செய்தபோது, அதில் சமூக இடைவெளி இல்லாமல் பயணிகளை அமர வைத்ததும், முகக்கவசம்  அணியாமல் பயணிகளை ஏற்றியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஷேர்  ஆட்டோவை பறிமுதல் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலர் உரிய நடவடிக்கை  எடுக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சூரம்பட்டி வலசு ரோட்டில் செயல்படும்  டீ கடை, பேக்கரி, டூவீலர் ஓர்க்ஷாப், ஓட்டல், வெல்டிங் பட்டறை, கேக்  ஷாப், வணிக வளாகம் ஆகியவற்றில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 6 கடைகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள்  பின்பற்றாதது கண்டுபிடித்து, 6 கடைகளையும் சீல் வைத்து, தலா ரூ.5ஆயிரம்  அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள தேநீர்  கடை, பெட்ரோல் பங்க், ஜவுளிகடை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு, முகக்கவசம்  அணிவது குறித்தும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்தும், கடைகள்  நிறுவனத்திற்கு உள்ளே வாடிக்கையாளர்கள் நுழையும் போது உடல் வெப்ப நிலை  பரிசோதனை செய்வது குறித்தும், கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியை  வழங்குவது குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்.

Related Stories: