சத்தான உணவு சாப்பிடுவது அவசியம் பிரசவத்தில் ஏற்படும் பிரச்னைகளால் தினமும் 1,400 பெண்கள் உயிரிழப்பு அரசு சுகாதார நிலைய மருத்துவர் பேச்சு

செய்யாறு, ஏப்.13: இந்தியாவில் பிரசவத்தில் ஏற்படும் பிரச்னைகளால் தினமும் 1,400 பெண்கள் உயிரிழக்கின்றனர். எனவே தாய்மை பேறு அடைவதற்கு முன்பு சத்தான உணவு சாப்பிடுவது அவசியம் என்று அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பேசினார். செய்யாறு அருகே நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக குத்தனூர் கிராமத்தின் தேசிய தாய்மை பாதுகாப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் என்.ஈஸ்வரி தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் கே.சம்பத், கிராம சுகாதார செவிலியர் குஷ்பூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது மருத்துவர் ஈஸ்வரி பேசியதாவது: கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான சுகாதார பராமரிப்பு, அத்தியாவசிய சிகிச்சை மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 11ம் தேதி தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 1,400 பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் இறக்கின்றனர். பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கர்ப்பகால தாய் சேய் உடல் நலப் பிரச்னைகளை சந்திக்கின்றனர். அதனால் தாய்மை பேறு அடைவதற்கு முன்னர் பெண்கள் சத்தான உணவுகளை உண்டு நல்ல உடல் ஆரோக்கியம் பெற்றவராக இருப்பது அவசியம். கர்ப்ப காலத்தில் குறைந்த பட்சம் நான்கு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அனுபவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உதவியோடு பிரசவத்தை அணுக வேண்டும். பிரசவம் ஆன முதல் ஒரு வார காலத்தில் கர்ப்பப்பை, சிறுநீர்ப்பை ஆகியவற்றில் தொற்று நோய் தாக்கம் ஏற்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தினமும் இரண்டு முறை குளிப்பது கழிவறை சென்று வந்த பின்னர் சோப்பு உபயோகித்து கை, கால்களை சுத்தம் செய்வது சுத்தமான சானிட்டரி நாப்கின் பயன்பாடு ஆகிய விஷயங்களை கவனமாக மேற்கொள்ள வேண்டும் மாதவிடாய் சமயங்களில் தினமும் நான்கு அல்லது ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கின் மாற்றுவது அவசியம். கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் அவரவர் குறைகளை மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: