லால்குடி அருகே கோயில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல்: 3 பேர் காயம்

லால்குடி, ஏப். 13: லால்குடி அருகே கோயில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயமடைந்தனர். தகராறில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த அன்பில் மாரியம்மன் கோயில் ரங்கம் ரங்கநாதர் கோயில் கீழ் செயல்பட்டு வருகிறது இக்கோயிலில் பங்குனி தேர் திருவிழா நடத்த இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோயில் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்து வந்தனர் இதையடுத்து கொரோனா நோய்த்தொற்று காரணமாக கோயில்களில் பொதுமக்கள் கூடாத வண்ணம் திருவிழா நடத்தவும் தமிழக அரசால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று கோயில் பணியாளர்களை கொண்டு கோயில் உள்ளே திருத்தேர் திருவிழா நடத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில் கீழ்அன்பில் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கரண் குமார்( 18), ஆசைதம்பி மகன் பிரசன்னா (16) ஆகிய இருவரும் தேர்க்காலில் உட்கார்ந்து இருந்ததாக கூறப்படுகிறது அப்போது கீழ் அன்பில் வடக்கு தெருவை சேர்ந்த குருசாமி மகன் பாபு (38) இதுகுறித்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில் பிரசன்னா, கரண் குமார் தரப்பில் 10க்கும் மேற்பட்டோரும் பாபு தரப்பில் 10க்கும் மேற்பட்டோரும் சேர்ந்து தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த பாபு, பிரசன்னா, கரண் குமார் ஆகிய மூவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரும் கொடுத்த புகார் பேரில் 20 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து தகராறில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: