வந்தவாசி தாலுகா அலுவலக வளாகத்தில் 9 லட்சத்தில் பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணியில் முறைகேடு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைக்கு கோரிக்கை

வந்தவாசி, ஏப்.13: வந்தவாசி தாலுகா அலுவலக வளாகத்தில் ₹9 லட்சத்தில் பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணியில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

வந்தவாசி தாலுகா அலுவலக வளாகத்தில் வட்ட விநியோக அலுவலருக்கான ஆவண காப்பக அறை தேர்தல் பிரிவு கட்டிடத்தின் அருகே தகரசீட்டால் அமைக்கப்பட்டுள்ளது. 40 வருடத்திற்கு மேலாக உள்ள இந்த கட்டிடத்தில், மழை காலத்தில் தகரசீட்டின் உள்ளே தண்ணீர் புகுந்து ஆவணங்கள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. இங்கு புதிய கட்டிடம் கட்டி தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் வருவாய் துறையினர் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து கடந்த 3 மாத்திற்கு முன்பு ஏற்கனவே பொதுப்பணித்துறை மூலமாக அங்கு இருந்த 10 அடி அகலம், 20 அடி நீளம் கொண்ட கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டது. அப்போது அங்கு கட்டிடம் தாங்கும் அளவிற்கு மண் தரமானதாக இல்லை என பொய்யான காரணம் காட்டி கட்டிடம் கட்டுவதை அதிகாரிகள் தட்டி கழித்தனர்.

மேலும், தற்போது கட்டிவரும் கட்டிடம் அருகே பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடங்களை தாங்கும் நிலையில் அப்பகுதியில் உள்ள மண், இந்த இரு கட்டிடங்களுக்கு அருகே கட்டப்படும் வட்ட வழங்கல் பிரிவுக்கான கட்டிடத்திற்கு, மண் தாங்கும் நிலையில் இல்லை என பொய்யான காரணம் காட்டி வருகின்றனர். மேலும், அங்கு உள்ள கட்டிடத்தில், ஏற்கனவே இருந்த தகர சீட்டுகளை அகற்றி, ₹9 லட்சம் மதிப்பீட்டில் அங்குள்ள பழைய சுவர்மீது மீண்டும் சுவர் எழுப்பி உயரத்தை அதிகரித்து, தகரத்தால் ஆன கூரை அமைக்கும்பணி நடந்து வருகிறது. மேலும், தகர சீட் இருந்த கட்டிடத்தின் சுற்றுச்சுவரின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது.

இந்நிலையில் சிமென்ட் உதிர்ந்து வரும் அதே சுவற்றில், ₹9 லட்சம் மதீப்பீட்டில் புதிதாக மேற்கூரை அமைக்க பொய்யான கணக்கு காட்டி, இதனை வருவாய் துறையை சேர்ந்த முக்கிய அலுவலரின் உதவியுடன் பொதுப்பணி துறையினர் கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அங்கு பணியில் உள்ள அலுவலர்கள் புலம்புகின்றனர். மேலும், தகர மேற்கூரையை அகற்றியதுபோல் அங்குள்ள பழைய சுவற்றையும் தரைமட்டமாக இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டினால் தான் நல்ல நிலையில் இருக்கும் என வட்ட வழங்கல் துறையில் உள்ளவர்கள், வருவாய் துறையின் முக்கிய அலுவலரிடமும், பொதுப்பணி துறையின் பொறியாளரிடமும் கூறியும், அவர்கள் செவி சாய்க்காமல் தேர்தல் நேரத்தில் இந்த பணியை வேகமாக நடத்தி வருகின்றனர்.

மேலும், தேர்தல் நேரத்தில் யாரும் கவனிக்கமாட்டார்கள் என்பதால் அவசரகதியில் இந்த பணி நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே இருந்த கூரையை அகற்றிவிட்டு புதிய தகரத்தால் ஆனா கூரை அமைக்க ₹9 லட்சம் என்பது அதிகமான தொகை என்பதால், முறைகேடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் ₹9 லட்சத்தில் தரமில்லா பழைய மண் சுவற்றின் மேல் தகரத்தால் ஆன கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories: