திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் கொரோனா விதிமுறை மீறியவர்களிடம் ₹3.85 லட்சம் அபராதம் வசூல்

திருவண்ணாமலை, ஏப்.13: திருவண்ணாமலை நகராட்சியில், கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து கடந்த 20 நாட்களில் ₹3.85 லட்சம் அபராதம் வசூலிகப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆனாலும், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றவில்லை. கடை வீதிகள், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில், முகக்கவசம் அணியாதவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. எனவே, கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதையொட்டி, நகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர், நகரின் முக்கிய பகுதிகளில் முகாமிட்டு, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

அதேபோல், முகக்கவசம் அணியாதவர்களை கடைகளுக்குள் அனுமதிக்கும் கடை உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை நகரில் கடந்த 20 நாட்களில் மட்டும் ₹3.85 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ₹13,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உணவகங்கள், டீ கடைகள், சூப்பர் மார்க்கெட், துணி கடைகள் போன்ற இடங்களில், வழக்கமாக அனுமதிக்கப்படும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில், 50 சதவீதம் மட்டும் அனுமதிக்க வேண்டும். கூடுதலான நபர்களை அனுமதிக்கும் கடைகளுக்கு சீல் வைத்தல் போன்ற நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என நகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: