94 இடங்களில் முகாம்கள் ஏற்பாடு வேலூர் மாவட்டத்தில் 45 வயது தாண்டியவர்களுக்கு 25ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி

வேலூர், ஏப்.13: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும் 25ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதன்படி, நேற்று மாவட்டம் முழுவதும் 94 இடங்களில் தடுப்பூசி போடும் முகாம்கள் நடந்தன.நாட்டில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுவெளிகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அதை அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல் கொரோனா தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.வேலூர் மாவட்டத்துக்கு அரசின் முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில், கலெக்டர் சண்முகசுந்தரம் முன்னிலையில் கடந்த 10ம் தேதி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை வரும் 25ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக வேலூர் மாவட்டத்தில் 46 ஆரம்ப சுகாதார நிலையங்கள், வேலூர் மாநகரில் 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், குடியாத்தம், பேரணாம்பட்டு, அணைக்கட்டு, ஜிபிஎச் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தவும், 7 ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் வேலூர் மாநகராட்சி என 8 பகுதிகளில் தலா 3 நடமாடும் மொபைல் மருத்துவக்குழுக்கள் மாவட்டத்தில் 24 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் ஸ்டேட் வங்கி கிளை உட்பட 16 வங்கி கிளைகளில் பணிபுரியும் 193 பணியாளர்களில் 45 வயது நிரம்பிய 68 வங்கி பணியாளர்களுக்கும், வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வங்கி பணியாளர்கள் என மொத்தம் 325 வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று வேலூர் ஸ்டேட் வங்கி பிரதான கிளையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து வேலூர் சத்துவாச்சாரி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து நேற்று தொடங்கி வரும் 18ம் தேதி வரை நடைபெறும் இலவச கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

 

அப்போது அவர், ‘மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க முன்களப்பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள், மருத்துவர்கள், வணிகர் சங்கம், காய்கறி வியாபாரிகள், தங்கும் விடுதி பணியாளர்கள், ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் என பொது மக்களிடம் தொடர்பில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைப்பெற்று வருகிறது’ என்றார்.  இந்நிகழ்ச்சிகளில் முன்னோடி வங்கி மேலாளர் ஜான் தியோடசியஸ், மண்டல மேலாளர் சேது முருகதுரை, மண்டல முதன்மை மேலாளர் குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன், தாசில்தார் ரமேஷ் மாநகர் நல அலுவலர் சித்ரசேனா, மோட்டார் ஆய்வாளர்கள் சக்திவேல், கருணாநிதி, ராஜேஷ் கண்ணா மற்றும் லாரி, பஸ், ஆட்டோ ஓட்டுநர் சங்க பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல் ேநற்று புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க், காட்பாடி லாரி உரிமையாளர்கள் சங்கம் பெட்ரோல் பங்க், ஆற்காடு சாலை இந்திரா பெட்ரோல் பங்க், வேலூர் பழைய பஸ் நிலையம் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க அலுவலகம், ஓட்டேரி தனியார் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. இம்முகாம்கள் மூலம் லாரி, பஸ் டிரைவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் தனியார் தொழிற்சாலை வாகன ஓட்டுநர்கள், கிளீனர்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஊழியர்கள் என 18 ஆயிரம் பேர் பயன்பெறுவர்.

Related Stories:

>