திருவிழாக்களில் நாடகம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்

கரூர், ஏப். 13: உரிய நிபந்தனைகளுடன் நாடக நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நாடக நடிகர் சங்கத்தினர் பல்வேறு வேடமணிந்து வந்து மனு கொடுத்தனர். கரூர் நாடக சங்க கலைஞர்கள் மற்றும் நாடக நடிகர்கள் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தில் 475 பேர் உறுப்பினர்களாக உள்ளோம். நாடக தொழிலை நம்பி எங்கள் குடும்பங்கள் பிழைத்து வருகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக நாடக தொழில் கடந்த 2020ம் ஆண்டு முதல் தற்போது வரை நாடகம் நடத்த இயலவில்லை. இதனால், வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம்.

எனவே, எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் திருவிழாக்களில் நாடகம் நடத்துவதற்கு, விதிகளில் கொஞ்சம் தளர்வுகள் தந்து, அனுமதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட எங்களுக்கு கடனுதவியும் வழங்க வேண்டும். மேலும், நாடகத்தை சமூக இடைவெளி கடைபிடித்து பிரச்னை இன்றி நடத்துவோம் என மனுவில் தெரிவித்துள்ளனர். இதேபோல் கரூர் நாடக நடிகர் சங்கத்தினர் வேடம் அணிந்து, ஆடல் பாடலுடன் வந்து வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூரில் நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலை உலகத்தை நம்பி வாழ்ந்து வருகிறோம்.

சென்றாண்டு கொரோனா தொற்று நோயின் காரணமாக திருவிழா நடத்த தடை ஏற்பட்டது. இதனால், கலை நிகழ்ச்சி நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்தோம். இந்தாண்டு திருவிழாவின் போது, கலைநிகழ்ச்சி மூலம் வாழ்வாதாரத்தை சரி செய்து கொள்வோம் என கனவு கண்டு கொண்டிருக்கும்போது, இந்த ஆண்டும் திருவிழா நடத்த தடையும், கலைநிகழ்ச்சி நடத்த அனுமதியில்லாத காரணத்தினால், கலைஞர்கள் அனைவரும் வேதனையோடு இருந்து வருகிறோம்.

இந்தாண்டு கலைநிகழ்ச்சி நடைபெறவில்லை என்றால் எங்கள் அனைவரின் வாழ்க்கை, வாழ்வா? சாவா? என உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் மூன்று மாத திருவிழாவின் மூலம் கலைநிகழ்ச்சி நடத்தி அதில் வரும் வருமானத்தை வைத்து அந்த ஆண்டு முழுதும் எங்களுடைய வாழ்வாதாரத்தை சரி செய்து கொள்வோம். எனவே, குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் நாடக நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>