×

கொரோனா பரவி வரும் நிலையில் தெரு தெருவாக பயண அட்டை விற்க சொல்லும் மெட்ரோ ரயில் நிர்வாகம்: ஊழியர்கள் அதிருப்தி

சென்னை: மெட்ரோ ரயில் ஊழியர்களை தெரு, தெருவாய் சென்று பயண அட்டையை விற்பனை செய்ய சொல்லும் நிர்வாகத்தின் உத்தரவால் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோநகர் வரையில் திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்ட பிறகு நாள் தோறும் 80 ஆயிரம் பேர் வரையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள், விழா நாட்களில் 50 சதவீத கட்டண தள்ளுபடி, க்யூ-ஆர் கோர்டு முறை பயணத்திற்கு 20 சதவீத கட்டண தள்ளுபடி என பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், டிக்கெட் கவுன்டரில் இருக்கும் பணியாளர்களை தெரு, தெருவாக சென்று பயண அட்டை விற்பனை செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எதிர்பார்த்த அளவிற்கு பயணிகள் எண்ணிக்கை இல்லாததால் நிர்வாகம் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நிர்வாகத்தின் இந்த உத்தரவிற்கு ஊழியர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் கூறியதாவது, “முதல் வழித்தடம் நீட்டிப்பிற்கு பிறகு தினம் தோறும் 1.50 லட்சம் பேராவது மெட்ரோ ரயிலில் பயணம் செய்வார்கள் என நிர்வாகம் எதிர்பார்த்தது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வரவில்லை. இதனால், ஊழியர்களை தெரு, தெருவாக சென்று பயண அட்டையை விற்பனை செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

டிக்கெட் கவுண்டர்களில் இருக்கும் ஊழியர்கள் காலை 4 மணி நேரம், மாலை 4 மணி நேரம் என இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேருந்து நிலையம், ரயில் நிலையம், வணிக நிறுவனங்கள், அஞ்சல் அலுவலகம், தெருக்கள், சந்தை போன்ற இடங்களுக்கு சென்று மெட்ரோ ரயில் பயண அட்டையை ஊழியர்கள் விற்பனை செய்கின்றனர். கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து பயண அட்டையை விற்பனை செய்ய சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுவரையில் 10க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இது  சாத்தியப்படாது. கொரோனா பெருந்தொற்று முடிந்த பிறகு பயண அட்டை விற்பனையில் ஊழியர்கள் ஈடுபடுகிறோம் என நிர்வாகத்திடம் தெரிவித்தோம். ஆனால், இதை நிர்வாகம் பொருட்படுத்தவில்லை. எனவே, கொரோனா காலத்தில் இந்த நடைமுறையை கைவிட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு கூறினர்.

Tags : Metro Rail Administration ,
× RELATED கடந்த மாதத்தில் 86,15,008 பேர் மெட்ரோ ரயிலில் பயணம்