×

சேலம் மண்டலத்தில் தொடங்கியது போக்குவரத்து பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி

சேலம், ஏப். 13:சேலம் மண்டலத்தில் 16 கிளைகளைச் சேர்ந்த போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனாவுக்கான தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நிறுவனங்கள் மற்றும் துறைகள் வாரியாக தனி முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மண்டலத்தில் உள்ள சேலம், நாமக்கல் மாவட்ட அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று அந்தந்த கிளைகளில் தொடங்கியது.

மண்டலத்தில் உள்ள மெய்யனூர், எருமாபாளையம், ஜான்சன்பேட்டை, பள்ளப்பட்டி, ராசிபுரம், திருச்செங்கோடு உள்பட 16 கிளைகளிலும் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சேலம் மண்டலத்தில், டிரைவர்கள், கண்டக்டர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் என 6,500 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 45 வயதுக்கு மேற்பட்ட, சுமார் 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே, பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழக பணியாளர்கள் கூறியதாவது: தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பணியாளர்களுக்கு ஏதேனும் உபாதைகள் ஏற்பட்டால், ஓய்வெடுக்க உரிய காலஅவகாசம் வழங்க வேண்டும். இதுபோன்ற முகாம்களிலேயே பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும். அனைத்து டிரைவர், கண்டக்டர்களுக்கும் போதுமான கிருமிநாசினி, கையுறை வழங்க வேண்டும். கையுறை அணிந்து டிக்கெட் கொடுப்பதில் சிரமம் உள்ளதால், மற்ற கோட்டங்களில் உள்ளதை போல, அனைத்து விதமான பஸ்களுக்கும் டிக்கெட் மெஷின்களை வழங்க வேண்டும். பஸ்களில் நின்று செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை போல, 3 நபர் இருக்கையில் இருவரும், 2 நபர் இருக்கையில் ஒருவரும் அமர்ந்து செல்ல மட்டும் அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு நடைக்கும், அனைத்து பஸ்களிலும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Salem ,
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...