×

திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் திடீர் மாயம்

சேலம், ஏப்.13:சேலம் அருகேயுள்ள சாமிநாயக்கன்பட்டியை  சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி சங்கீதா(21). கடந்த மாதம் 5ம்தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த 9ம்தேதி காலை அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. எல்லா  இடங்களிலும் தேடிப்பார்த்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், கருப்பூர் போலீசில்வீரமணி புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், சங்கீதாவுடன் படித்த கல்லூரி மாணவி ஒருவரையும் காணவில்லை. சங்கீதா திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரியில் படித்த போது, ஜேடர்பாளையத்தை சேர்ந்த கோகிலா என்பவரும் படித்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இருவரும் நெருங்கிய தோழிகள் என கூறப்படுகிறது. சங்கீதா காணாமல் போன நாளில் கோகிலாவும் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் எலச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் எங்கே போனார்கள்? என்பது குறித்து அவர்களிடம் இருக்கும் செல்போன் எண்ணை கொண்டு விசாரணை நடந்து வருகிறது.

இறந்த ஆடுகளை வீசுவதால் அபாயம்:  ஓமலூர் வட்டாரத்தில் கூடும் சந்தைகளில் விற்பனை செய்ய பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடுகளை மொத்தமாக லாரிகளில் ஏற்றிகொண்டு வருகின்றனர். இதில் வழியிலேயே இறக்கும் ஆடுகளை ஆங்காங்கே வீசிச்செல்கின்றனர். கடந்தவாரம் புளியம்பட்டி பவனூர் மேடு அருகே தனியார் நிலத்தில் 10க்கும் மேற்பட்ட இறந்த ஆடுகளை வீசி சென்றுவிட்டனர். இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து ஆடுகளை புதைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விபத்தில் சேதமான மின்கோபுர கம்பம்: மேட்டூர் - சேலம் சாலை குஞ்சாண்டியூர் மூலக்கடையில் ₹5 லட்சம் மதிப்பில், கடந்தாண்டு உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இரண்டு முறை லாரி மோதியதில் மின்கோபுர விளக்கு சாய்ந்த நிலையில் உள்ளது. காற்றடிக்கும் போதெல்லாம் கம்பம் ஆடுகிறது. எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் : ஆத்தூர் டவுன் காவல் நிலையத்தில் எஸ் ஐ மூர்த்தி தலைமையில் 20 பேருக்கும், ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் 20 பேருக்கும், கெங்கவல்லியில் எஸ் ஐ ராமசாமி, செல்வராஜ் தலைமையில் 30 பேருக்கும், வீரகனூரில் எஸ்ஐ தினேஷ் குமார் தலைமையில் 20 பேருக்கும், கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் கனிமொழி, விஏஓ  ஆனந்த் தலைமையில் 15 பேருக்கும் மொத்தமாக 115 பேருக்கு தலா ₹200 வீதம் ₹23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

வணிகர்களுக்கு அபராதம்: ஆத்தூர்  கடைவீதி, உடையார்பாளையம், கிரைம் பஜார், காமராஜர் ரோடு உள்ளிட்ட வணிக வளாகங்கள் நிறைந்த பகுதிகளில், ஆத்தூர் நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத  4 வணிகர்களுக்கு தலா ₹500 வீதம் ₹ 2ஆயிரமும், முக கவசம் அணியாத 10 பேருக்கு தலா ₹200 வீதம் ,₹2ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டன. நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு:   தாரமங்கலம், ஏப்.13: தாரமங்கலம் அடுத்த முத்துநாயக்கன்பட்டி எல்லாயூரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி கனகா(44). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் குடும்பத்தாருக்கும் இடையே நிலப்பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம், மாதேஸ்வரன் தரப்பினர்,  கனகாவை தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த அவர்,  ஓமலூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சுந்தர்ராஜன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் மாதேஸ்வரன், கார்த்திக், பொன்மணி, சக்தி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்:வாழப்பாடி பேரூராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பேரூராட்சி பகுதிகளில் வரும் பஸ், ஆட்டோ, கார் மற்றும் டூவீலர்களை நிறுத்தி, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.மேலும், முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்ற 20 பேரை பிடித்து,  தலா ₹200 வீதம் ₹4 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.  கடந்த ஒரு வாரத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களிடம் ₹75 ஆயிரம் அபராதமாக பேரூராட்சி அலுவலர்கள் வசூலித்துள்ளனர்.

₹1.10 கோடிக்கு பருத்தி ஏலம்:  ஆத்தூர்  அடுத்த புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, சின்னசேலம், திட்டக்குடி சுற்றுவட்டார  பகுதிகளை சேர்ந்த 712 விவசாயிகள் 5,300 மூட்டை பருத்தியை ஏலத்துக்கு கொண்டுவந்தனர். இதை கொள்முதல் செய்ய சேலம், ஈரோடு, திருச்சி, கோவை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 23 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் பிடி ரகம் பருத்தி குவிண்டால் ₹5,019 முதல் ₹6,699 வரையும், டிசிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ₹6,799 முதல் ₹9,139 வரையும், ஒட்டு ரக பருத்தி குவிண்டால் ₹2,499 முதல் ₹3,605 வரையும்  ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த  5,300 மூட்டை பருத்தி ₹1.10 கோடிக்கு ஏலம் போனது.

கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு:  இளம்பிள்ளை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக 10, 50 மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளது. காய்கறி கடைகள் துவங்கி, அனைத்து இடங்களிலும் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, போலீசார் தீவிரமாக கண்காணித்து, கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திமுக சார்பில் நீர்மோர் பந்தல்:கொளத்தூர் பேருந்து நிலையத்தில், ஒன்றிய திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. ஒன்றிய பொறுப்பாளர் மிதுன் சக்ரவர்த்தி, நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்ப்பூசணி, மோர் மற்றும் தண்ணீர் வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ராமநாதன், பேரூர் பொறுப்பாளர் நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்தகொண்டனர். பி.என்.பட்டியில்கொரோனா தடுப்பு பணிகள் மந்தம்: வீரக்கல்புதூர் பேரூராட்சி,  பி.என்.பட்டி பேரூராட்சி பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் முககவம் அணிந்து வரவேண்டும். வணிக நிறுவனங்கள், காய்கறி கடைகள், அழகு நிலையங்கள் ஆகியவற்றில் முக கவசம் அணிவது, கிருமிநாசினி வைக்கவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், வீரக்கல் புதூர் பேரூராட்சி மற்றும் பி.என். பட்டி பேரூராட்சி பகுதிகளில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏதாவது ஒரு இடத்தில் பெயரளவுக்கு சோதனை நடத்துகின்றனர். இங்குள்ள வர்த்தக கடைகள் வழிகாட்டி நெறிமுறையை பின்பற்றுவது இல்லை. இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டேலா திரைப்படத்திற்கு முடிதிருத்துவோர் எதிர்ப்பு:சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும்  வீரத்தியாகி விஸ்வநாதாதாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில், 15க்கும் மேற்பட்டோர் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘சமீபத்தில் மண்டேலா என்ற திரைப்படம் தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. இதில், முடி திருத்தம் தொழில் செய்து வரும் மருத்துவ சமூக மக்களை மிகவும் இழிவாக சித்தரித்து பல்வேறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே, படத்தில் உள்ள இது சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக நீக்க வேண்டும். மேலும், இதற்காக தார்மீக பொறுப்பேற்று, பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்,’’ என்றனர். இடைப்பாடியில் மழை: இடைப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை 6.30 மணியளவில் திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. ஒட்டப்பட்டியில் இடி, மின்னல் அதிகளவில் ஏற்பட்டது. முன்னாள் ஒன்றிய சேர்மன் தொப்பகவுண்டர் என்பவரின் தோட்டத்தில், மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. திடீர் மழையால் வெப்பம் தணிந்ததால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை