×

பெயரளவுக்கு ‘மாஸ்க்’ அணியும் பொதுமக்கள்

சேலம், ஏப்.13:சேலத்தில் பெயரளவுக்கு மட்டுமே பலர் முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். இது கொரோனா பரவலுக்கு வழிவகுத்து வருவதாக நோய் தடுப்பு ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வப்போது சோப்பு, ஹேண்ட்வாஷ் கொண்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை அரசு வலியுறுத்தி வருகிறது. சாலையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து ஊழியர்கள் அபராதம் வசூலித்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியம் காட்டுகின்றனர். சேலத்தில் சேலம் கடைவீதி, சேலம் பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட், முதலாவது அக்ரஹாரம், தேர் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாகும். இந்த பகுதிகளில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள், வணிக நிறுவன ஊழியர்கள், சாலையோர வியாபாரிகள் பலர் முகக்கவசம் அணியாமல் உள்ளனர். முகக்கவசம் அணிந்து இருப்பவர்களில் 10 சதவீதம் பேர் தான் அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடித்து முழுமையாக மூக்கு மற்றும் வாயை மூடிக்கொள்கின்றனர்.

இது குறித்து நோய் தடுப்பு ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘சேலத்தில் 90 சதவீதம் பேர், பெயரளவுக்கு முகக்கவசத்தை மூக்குக்கு கீழே அணிந்து செல்கின்றனர். அதாவது வாய்க்கு மட்டுமே முகக்கவசம் உள்ளது. மூக்குக்கு முகக்கவசம் அணிவதில்லை. மற்றவர்களிடம் இருந்து கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு தான் மூக்கு மற்றும் வாய்க்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அதிகாரிகளும், டாக்டர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதனை பொதுமக்கள் பின்பற்றாமல் இருப்பது வேதனை. கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைவரும் வாய் மற்றும் மூக்கை சேர்த்து முகக்கவசம் அணிய வேண்டும்,’’ என்றனர்.

Tags :
× RELATED விஷ தேனீக்கள் அழிப்பு