ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையால் கொரோனா பரவும் அபாயம்

கிருஷ்ணகிரி, ஏப்.13: ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிவேகம் எடுத்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் மற்றும் சுகாதாரத்துறையினர் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கொரோனா 2வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 5ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவலே இல்லாத நிலையில், தற்போது மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து 600க்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் வருவதால், கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பயோமெட்ரிக் முறைக்கு இடைக்கால தடை விதித்து, ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் முறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: