பாளையம் சுங்கச்சாவடியில் கழிவுநீரை பஞ்சாயத்து ஆழ்துளை கிணற்றில் விடும் அவலம்

நல்லம்பள்ளி, ஏப்.13: நல்லம்பள்ளி அருகே பாளையம் சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டுள்ள கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பஞ்சாயத்து சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் கலப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாளையம் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்து வருகின்றனர். இதனால் நல்லம்பள்ளி அடுத்துள்ள குறிஞ்சி நகர் பகுதியில் சுங்கச்சாவடி மையம் அமைத்து, இதன் வழியாக தர்மபுரி-சேலம் செல்லும் வாகனங்கள் மற்றும் சேலம்-தர்மபுரி செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

இந்த சாலை வழியாக செல்பவர்கள் பயன்படுத்தும் வகையில் இருபுறமும் கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் சுங்க சாவடி மையத்தின் சேலம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவறையிலிருந்து வெளியேறும் கழிவுநீர், திறந்தவெளியில் விடப்படுகின்றது. இந்த கழிவு நீரானது பாளையம்புதூர் பஞ்சாயத்துக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் விடப்பட்டு நிரம்பி உள்ளது. இதனால் கழிவுநீர் 300 அடி ஆழத்திற்கு நேரடியாக சென்று நிலத்தடி நீரில் கலப்பதால், நிலத்தடி நீர் நச்சுத்தன்மை கொண்டதாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கழிவறை அருகே அதரவற்றோர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி அருகிலேயே அதிக அளவில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுங்க சாவடி அதிகாரிகளிடமும், பாளையம் புதூர் பஞ்சாயத்து நிர்வாகத்திடமும் பலமுறை புகார் கூறியும் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே சுங்கச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக அப்புறப்படுத்தவும், ஆழ்துளை கிணற்றை மீட்டு எடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: