மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதித்தவர்களை கண்டறியும் பணி தீவிரம்

தர்மபுரி, ஏப்.13: தர்மபுரி மாவட்டம் முழுவதும் காய்ச்சல் உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். உள்ளாட்சி துறை பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் காய்ச்சல் உள்ளவர்களை, அந்தந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தி வருகின்றனர். இதே போல், தர்மபுரி காந்திநகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும், காய்ச்சல் உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.குறிப்பாக, கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள பகுதிகளான மதிகோன்பாளையம், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில், நகராட்சி ஆணையர் தானுமூர்த்தி, நகராட்சி பொறியாளர் சுரேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், நாகராஜ், ரமணசரன், சுசீந்திரன் ஆகியோர் தலைமையில் தூய்மை பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும்பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பஸ்நிலையத்திற்கு வரும் பஸ்களில், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து உள்ளனரா, சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர்.

Related Stories: