திண்டிவனம் அருகே செக்யூரிட்டி வீட்டின் கதவை உடைத்து கொள்ளை மர்ம நபர்களுக்கு வலை

திண்டிவனம், ஏப். 13: திண்டிவனம் அருகே பாதுகாவலர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிங்கனூர் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் இருசப்பன் மகன் சரவணகுமார்(50), இவர் ஆரோபுட்டில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் தூங்க சென்றார். நேற்று அதிகாலை சரவணகுமாரின் மனைவி மாரியம்மாள்(43), வீட்டை வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ரூ.45 ஆயிரம் பணம், அரை பவுன் செயின், 2 வெள்ளி கொலுசு ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

இதேபோல், அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பசுபதி வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து தகவலறிந்த டிஎஸ்பி கணேசன் மற்றும் மயிலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>