பஸ் நிலையம், வணிக வளாகம் அமைவது எப்போது காட்சி பொருளான அரசு கட்டிட தூண்கள்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கத்தல் பஸ் நிலையம், வணிக வளாகம் அமைப்பதற்காக தொடங்கிய பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால், அந்த பகுதி காட்சி பொருளாக காணப்படுகிறது. திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கத்தை ஒட்டி தையூர் ஊராட்சி அமைந்துள்ளது. பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள இந்த ஊராட்சியில் 10 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அதிக பரப்பளவு கொண்ட ஊராட்சி என்பதால் ஏராளமான தனியார் வீட்டு மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி, மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு பழைய மாமல்லபுரம் சாலையில் அரசு புறம்போக்கு நிலத்தில் பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைக்க கடந்த 2012ம் ஆண்டு தையூர் ஊராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கின.

அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு பஸ் நிலையத்தை சுற்றிலும் வணிக வளாகம் மற்றும் கடைகள் அமைப்பதற்கு வசதியாக கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டன. ஆனால், தூண்கள் அமைக்கப்பட்டதோடு பணிகள் நிறுத்தப்பட்டன.

போதிய நிதி ஆதாரம் இல்லாததால் நிறுத்தப்பட்ட பணிகளை தொடங்க ஊராட்சி மன்ற நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக காட்சி பொருளாகவே, இந்த வணிக வளாக தூண்கள் காணப்படுகின்றன. கேளம்பாக்கம் வரை வரும் பஸ்களை தையூர் பஸ் நிலையம் வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இப்பகுதி பொதுமக்களால் நீண்ட நாட்களாக வைக்கப்படுகிறது.  பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைக்கப்பட்டால் மட்டுமே பஸ்களை நீட்டித்து இயக்க முடியும் என மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாகம் கூறிவிட்டது.

ஆனால், திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சிறப்பு நிதி ஒதுக்கி பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைக்காமல் காலம் தாழ்த்துவது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனால், தையூர் ஊராட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, மக்கள் நீண்ட தூரம் நடந்தும், இரு சக்கர வாகனங்களில் சென்றும் கேளம்பாக்கம் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தையூர் ஊராட்சியில் பாதியில் நிற்கும் பஸ் நிலையம் மற்றும் வணிக வளாக பணிகளை விரைந்து முடிக்க சிறப்பு நிதி ஒதுக்கி விரைவில் முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: