கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை பல்வேறு இடங்களில் கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பாக, கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது : கொரோனா நோய்த் தொற்று இரண்டாவது அலை பரவல் காரணத்தையொட்டி, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பூண்டி ஊராட்சி ஒன்றியம் பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் விடுதிகளில் கோவிட் கேர் மையங்கள் அமைப்பதற்காக அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்மையத்தில் 720 க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட நோயாளிகள் சில தினங்களுக்குள் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட 24 மணி நேரமும் தங்கி பணிபுரிய அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையான சுத்தமான கழிவறைகள், 24 மணி நேர குடிநீர் வசதி, மெத்தைகள், உணவு ஆகியவை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 3500-க்கும் மேற்பட்ட நபர்களிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகளுக்கு அனுப்பப்படுகிறது.  இதுவரை 15,029 நபர்களிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசிகள் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் சராசரியாக அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக மொத்தம் 200 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஒரு நாளைக்கு 2100 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் 19 நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களின்படி, மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நோய்த்தொற்று தடுப்பு நடிவடிக்கைளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து, காக்களுர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்  சுபத்ரா ராஜ்குமார்  தலைமையில் நடைபெற்ற கொரோனா நோய்த்தொற்று தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுவதையும், சளி மாதிரிகளை சேகரிக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, சுகாதாரப்பணிகள் சுகாதார துணை இயக்குநர் ஜவஹர்லால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ச.வித்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: