செங்கம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செங்கம், ஏப்.12: செங்கம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமற்ற அரிசி வழங்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கம் நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தமிழக அரசின் ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. இதில் பகுதி நேர நியாய விலைக்கடை, முழு நேர நியாய விலை கடை என பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் முழு நேரம் ரேஷன் கடையும் குறைவாக பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் பகுதி நேர ரேஷன்கடை இயங்கி வருகிறது.

தற்போது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பொதுமக்களுக்கு அரிசி குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாயில் என வழங்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக செங்கம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அரிசி மிகவும் தரமற்றதாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை பெற்று செல்லும் பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ரேஷன் கடை விற்பனையாளரை கேட்டதற்கு, முறையாக பதில் அளிக்காமல் பொதுமக்களை அலட்சியமாக வேண்டும் என்றால் வாங்கி செல், இல்லையென்றால் வாங்காதே என்று பதில் அளிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் அலுவலர் தனி கவனம் செலுத்தி குடும்ப அட்டைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் அரிசியை ஏழை எளியோர் சமைத்து உண்பதற்கு நல்ல தரமான அரிசி வழங்க வேண்டும். மேலும் கொரோனா காரணமாக ஏழை, எளிய பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலவச ரேஷன் அரிசியை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசியை வழங்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: