மாஸ்க் அணியாதவர்களுக்கு பஸ்களில் அனுமதி இல்லை போக்குவரத்து அதிகாரிகள் தகவல் கொரோனா வேகமாக பரவுகிறது

வேலூர், ஏப்.12: கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பஸ்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அனுமதி இல்லை என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பஸ்களில் இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நின்று பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மாஸ்க் அணிந்து கொள்ளாமல் அலட்சியமாக மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவர்களை அதிகாரிகளும் கண்டு கொள்ளுவது இல்லை. அபராதம் விதிக்கப்படுவது இல்லை. இதனால் அவர்கள் தொடர்ந்து மாஸ்க் அணியாமல் பணியாற்றி வருகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் கோட்டத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பஸ்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. கண்டக்டர்கள், நடத்துனர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அவ்வாறு அணியாத டிரைவர் கண்டக்டருக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வந்தால் தான் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படும். பஸ்சில் கண்டக்டர் டிரைவர்கள் கிருமிநாசினி வைத்திருப்பார்கள். அவர்கள், பயணிகளுக்கு வழங்குவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏசி பஸ்களில் கட்டுப்பாடு போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஏசி பஸ்களில் 65 வயதுக்கும் மேல் உள்ள பயணிகள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து பயணம் மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

Related Stories: