×

கரும்பு அறுவடை தீவிரம்

உடுமலை, ஏப். 12:  உடுமலை, மடத்துக்குளம் ஆகிய இரண்டு தாலுகாக்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் 10 மாத கால பயிரான கரும்பினை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவக்கத்தில் பயிரிட துவக்கினர். கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்யாத விவசாயிகளும் வேடப்பட்டி, காரத்தொழுவு, கணியூர், நிலம்பூர், சர்க்கார்கண்ணாடிப்புத்தூர், பெருமாள்புதூர், கொமரலிங்கம், பாப்பம்குளம், ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் கரும்பு பயிரிட்டிருந்தனர்.

அமராவதி ஆற்று பாசனத்தின் மூலம் கரும்புகள் செழித்து வளர்ந்து வந்தன. உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட வெல்லம் பாகு காய்ச்சும் ஆலைகள் இயங்கி வந்தன. தற்போது ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பல ஆலைகள் மூடப்பட்டு விட்டன. பத்துக்கும் குறைவான ஆலைகளே தற்போது இயங்கி வருகின்றன. இந்நிலையில், கரும்பின் பிழிதிறன் கோடை காலத்தில் குறைந்து விடக் கூடாது என்பதற்காக விவசாயிகள் கரும்பு அறுவடையை தீவிரப்படுத்தி உள்ளனர். நாளொன்றுக்கு 300 டன் கரும்பு வரை அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இவர்கள் தங்களது கரும்புகளை ஏற்கனவே அமராவதி சர்க்கரை ஆலையில் பதிவு செய்திருந்த விவசாயிகளிடம் விற்பனை செய்கின்றனர்.

ஒரு சிலர் வெல்லம் அரவை ஆலைக்கு விற்பனை செய்கின்றனர். அமராவதி பாசன பகுதியில் பயிரிடப்படும் கரும்புகளில் பெரும்பான்மையானவை வெல்லம் தயாரிக்கப்பட்டு பழனி தாலூகா நெய்க்காரன் பட்டியில் விற்பனை செய்யபடுகிறது.
தற்போது, கோடை வெயில் கொளுத்தி வருவதால் ஒரு சிலர் கோவை, திருப்பூர், பழனி, ஒட்டன்சத்திரம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் கரும்புச்சாறு கடைகளுக்கும் கரும்புகளை விற்பனை செய்து வருகின்றனர். கோடை காலம் முடியும் முன்பாக கரும்பு அறுவடையை முடித்து விட வேண்டும் என விவசாயிகள் முழுவீச்சில் அறுவடையில் இறங்கி உள்ளனர்.

Tags :
× RELATED தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த...