முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே படகு சவாரிக்கு அனுமதி

ஊட்டி,ஏப்.12:  கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஊட்டி படகு இல்லத்திலும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து கொரோனா தொற்று பாதிப்பு குறைய துவங்கியது. தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேலாக தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 2வது வாரத்திற்கு பிறகு தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 30 பேர் வரை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனிடையே கொரோனா இரண்டாவது அலையை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி பூங்காக்கள், சுற்றுலாத்தலங்களில் 50 சதவீத சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதன்படி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் சுற்றுலா பயணிகள் புல் மைதானங்களில் அமர்ந்து இளைப்பாற தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்காவை சுற்றி பார்த்து விட்டு 1 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே நடைமுறை ஊட்டி படகு இல்லத்திலும் கடைபிடிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஊட்டி படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் முக கவசம் அணிந்துள்ளனரா என்பது பரிசோதித்த பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளிடம் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்ற விவரம் சேகரிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் தனிமனித இடைவெளி பின்பற்றி டிக்கெட் வாங்குவது உறுதி செய்யப்பட்ட பின்னரே படகு சவாரி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஒரே சமயத்தில் 50 சதவீதத்திற்கு மேல் சுற்றுலா பயணிகள் வந்தால், ஏற்கனவே வந்தவர்கள் வெளியேறிய பின்னர் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Related Stories:

>