கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி கிராமங்களில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது

ஊட்டி,ஏப்.12: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கிராமப்புறங்களில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. 3 பேருக்கு மேல் பாதித்த பகுதிகள் கட்டுபாட்டு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் உள்ள 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 30 சதவீதம் அதாவது 2.50 லட்சம் பேர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். இதில் சுமார் 55 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளாத 45 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். அவர்கள் வசிக்க கூடிய பகுதிகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டுபாட்டு பகுதிகளில் அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றாமல் மீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுபாட்டு பகுதிகளில் காவல்துறை, உள்ளாட்சித்துறை அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அரசு தெரிவித்துள்ளபடி திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இறப்பு நிகழ்வில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். திருமணம் மற்றும் சிறு சிறு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட ஆர்டிஒ.,களிடம் அனுமதி பெற வேண்டும். கிராமப்புறங்களில் ஏதேனும் அனுமதியின்றி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பஸ்களில் நின்று கொண்டு பயணிக்க அனுமதியில்லை. பயணிக்கும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சோதனை சாவடிகளில் கொரோனா பரிசோதனை குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கிராமப்பகுதிகளில் கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.

Related Stories: